வளமான வாழ்க்கைக்கு….யூ எல் ஐ பி திட்டங்கள்

வளமான வாழ்க்கைக்கு உதவும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கு யூ எல் ஐ பி திட்டங்கள்

நண்பர் ஒருத்தர் எச் டி எஃப் சியின் ULIP (Unit Linked Insurance Policy) யில் “முதலீடு” செய்துள்ளார். அவருக்கு எச் டி எஃப் சி நிறுவனம் அனுப்பிய அரையாண்டு கட்டணம் குறித்த அறிக்கை இது.

நண்பர் “முதலீட்டு” திட்டத்தில் அவருக்கு 3.6 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடும், வானளாவிய வருமானமும் கிடைக்கும் என சொல்லியிருக்கின்றனர். அதற்கு அவர் கட்டிய தொகை ஆண்டுக்கு 36,000 ரூபாய்கள்

மாதத்துக்கு அவர் செலுத்தும் 3000 ரூபாய் எப்படி போகிறது என்று பாருங்கள்
ஒரு ஃபண்டுக்கு பாலிசி சார்ஜஸ் 132 ரூபாய் / மாதம்
அடுத்த ஃபண்டுக்கு பாலிசி சார்ஜ் 148 / மாதம்
மோர்ட்டாலிட்டி சார்ஜ் (ஆயுள் காப்பீடு) 90 ரூ
பாலிசி அட்மினிஸ்ட்ரேசன் சார்ஜ் 151 ரூ
ஆக மொத்தம் எச் டி எஃப் சி எடுத்தது மாதத்துக்கு 521 ரூபாய்.

எச் டி எஃப் சிக்கு போகலேன்னலும் வரி 37 ரூபாய்
ஆக மொத்தம் நண்பர் செலுத்தும் 3000 ரூபாயில் கிட்டத்தட்ட 560 ரூபாய் கோவிந்தா. கட்டும் பணத்தில் 18.5% போக மிச்சம் தான் உண்மையிலேயே மியூச்சுவல் ஃபண்டுக்கு போயிருக்கு.

இதுல இன்னோரு கொடுமை இருக்கு. அவருக்கு வழங்கப்படும் காப்பீடு வெறும் 3.6 லட்சம் மட்டுமே, அதற்கு அவர் தரும் விலை மாதம் 90 ரூபாய் அதாவது ஆண்டுக்கு 1080 ரூபாய். அதை அப்படியே ஒரு கோடிக்கு மாற்றினால் ஆண்டுக்கு 30,000. அதை விட குறைந்த தொகையில் அவர் 1 கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்திருக்க முடியும்.

வெறும் 3.6 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீட்டை வச்சி குடும்பம் ஒராண்டு கூட ஓட்ட முடியாது. முதலீடாகப் பார்த்தாலும் இவ்வளவு கட்டணங்கள் போக மிச்சத்தை வச்சி பெரிய வளர்ச்சியும் இருக்காது. காப்பீட்டையும் முதலீட்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் டெர்ம் பாலிசி எடுத்து விட்டு முதலீட்டுக்கு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களில் நேரடியாக முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.

வளமான வாழ்க்கைக்கு யூ எல் ஐ பி என்று ஆரம்பத்தில் சொன்னேன், அங்க அதை உங்களுக்கு விற்கும் ஏஜெண்ட்டின் வளமான வாழ்க்கைக்கு என்று சொல்ல மறந்து விட்டேன்

Please follow and like us: