சென்செக்ஸும் எண்டோமெண்ட்டும் பின்னே ஓய்வு காலமும்

சென்செக்ஸும் எண்டோமெண்ட்டும் பின்னே ஓய்வு காலமும்

நீண்ட கால தண்ணி தேவைக்கு கிணறு வெட்டலாம்னு முடிவு பண்றீங்க. ரெண்டு இடங்களில் முயன்றால் தண்ணி கிடைக்கும்னு வல்லுனர் சொல்றார். ஒரு இடத்தில் தோண்டுவது சுலபம், சொல்லப்போனா வேலையே இல்லை, தண்ணி வருவதற்கு வாய்ப்பு அதிகம் ஆனா கிடைக்ககூடிய தண்ணி எதிர்காலத்தில் உங்க தேவையில் பாதியைக் கூட பூர்த்தி செய்யாது.

இன்னோரு பாதை கடினமானது. தோண்டும் போது பல பாறைகளையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிடும். சிறு கட்டணத்துக்கு ஒரு வல்லுனரை நியமித்துக் கொண்டால் காரியம் சுலபமாகும், அப்பவும் பொறுமை மிக அவசியம். ஆனா தண்ணி வரும் போது உங்க எதிர்காலத் தேவையை விட அதிகமாக வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

பல்லாண்டுகள் காத்திருந்தும் தேவையில் பாதிகூட பூர்த்தி செய்யாத கிணறா அல்லது கோடிக்கணக்கான பேர் வெற்றிகரமாக கையாண்டால் , பொறுமையோடு இருந்தால் தேவைக்கு அதிகமா தண்ணி தரக்கூடிய கிணறா இதில் உங்க சாய்ஸ் என்ன? ரெண்டாவதுதானே? அப்புறம் ஏன் எண்டோமெண்ட் பாலிசிகள் உங்க எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும்னு நம்பறீங்க?

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் எந்த ஒரு முதலீட்டு ஆலோசகரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் முதலீடு செய்யச் சொல்வதில்லை, அவற்றைத் தவிர்க்கவே சொல்கிறனர். அதற்கு முக்கியக் காரணம் காப்பீட்டு நிறுவனங்களின் திட்டம் எதுவும் இன்ஃப்ளேசனைத் தாண்டி வளர்ச்சி காண்பதேயில்லை

No photo description available.

இதோ இந்தப் படத்தைப் பாருங்கள் – 1986ம் ஆண்டு 625 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் இன்று 40,000 புள்ளிகள். அதாவது 1986ம் ஆண்டு 625 ரூபாய்களை சென்செக்ஸ் இண்டெக்ஸில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு 40 ஆயிரம் ரூபாய்கள். 36 ஆண்டுகளில் 64 மடங்கு உயர்வு. நீண்ட கால வளர்ச்சி வரி விகிதமாக லாபத்தில் 10% கொடுத்த பின்பும் மிச்சமிருப்பது 35437 ரூபாய் – அதாவது 57 மடங்கு – கூட்டுவட்டி முறையில் 13.5% year on year வளர்ச்சி.

கனியிருக்க காய் கவர்ந்தற்று என்று சொன்ன முன்னோர்களை முட்டாளாக்கிவிட்டு எண்டோமெண்ட் பாலிசிகளில் செய்யும் முதலீடு எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் மிகப் பிரபலமான எண்டோமெண்ட் பாலிசின்னு பாத்தால் அது எல் ஐ சியின் ஜீவன் ஆனந்த் பாலிசிதான். அதன் ரிட்டர்ன் எப்படி இருக்ககூடும்னு பாத்தேன் (இதைத் தரும் வெப்சைட்டின் லின்க் முதல் கமெண்ட்டில்)

பாலிசிதாரரின் வயது 40
பாலிசி காலம் 20 ஆண்டுகள்
ரைடர்கள் : எதுவுமில்லை 
காப்பிட்டுத் தொகை 25 லட்சம்
இதற்கு ஜீவன் ஆனந்தின் ப்ரீமியம் – மாதம் 13476 ரூபாய் 
அவருடைய 60வது வயதில் வரக்கூடிய மெச்சூரிட்டி 49,25,000 ரூபாய்கள் 
(இது நிச்சயம் கிடையாது. இது நாள் வரை எல் ஐ சி தந்து வரும் போனஸ் அடுத்த 20 ஆண்டுகள் தந்தால் வரக்கூடிய தொகை)
25 லட்ச ரூபாய் காப்பீடு கிட்டத்தட்ட அனைவருக்குமே தேவை ஆனால் மாதம் 13500 ரூபாய் காப்பீடு + முதலீட்டுக்கு எத்தனை பேரால் முதலீடு செய்ய முடியும்?

அதே எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி 25 லட்ச ரூபாய்க்கு ப்ரீமியம் வெறும் 678 ரூபாய் மட்டுமே. காப்பீட்டுக்கு அதை எடுத்து வைத்து விட்டு மிச்சமிருக்கும் 12,978 ரூபாயை மாதாமாதம் 20 ஆண்டுகள் முதலீடு செய்தால் வெறும் 4.5% வளர்ச்சியில் அது 49,67,000 ரூபாயாக இருக்கும்.

அதாவது அப்பாடக்கர் பாலிசி என்று அனைத்து ஏஜெண்ட்டுகளாகளாலும் விற்பனை செய்யப்படும் ஜீவன் ஆனந்த் பாலிசி தரும் ரிட்டர்ன் 4.5% கூட இல்லை என்பதே உண்மை. பாலிசி காலத்தை அதிகரித்து, ஆண்டுக்கொருமுறை ப்ரீமியம் செலுத்தி என்று எப்படி குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தாலும் இது தரும் ரிட்டர்ன் இன்ஃப்ளேசனுக்கே காணாது.

இதெல்லாம் தெரியாம பாலிசி போட்டுட்டீங்க, இப்ப என்ன பண்ணலாம்? 
1. போனது போகட்டும்னு கேன்சல் செய்யலாம் – அப்போ போட்ட பணத்தில் பாதி வரலாம் அல்லது எதுவுமே கிடைக்காம போகலாம்
2. பாலிசியை Paid Up ஆக மாற்றலாம். இப்படி செய்தால் அதுக்கப்புறம் ப்ரீமியம் கட்ட வேண்டாம், இதுவரை கட்டிய பணமும் போனஸும் எல் ஐ சி வசம் இருக்கும், பாலிசி முடிவுறும் போது அது உங்க கைக்கு வரும்.

இனியாவது தயவு செய்து ஜீவன் ஆனந்த் பாலிசி போட்டிருக்கேன், அது நல்ல பாலிசியா? தொடரலாமான்னு கேள்விகள் அனுப்பாதீங்க. இதை விட தெளிவா வேறு மொழியில் எனக்குச் சொல்லத் தெரியாது.

I am a firm believer of Insurance and I strive to cover my life and other valuable possessions with an appropriate level of insurance.
This is not intended to undermine the value of Life Insurance but it is merely an effort to find out the right choice among options.
This is my personal opinion about Insurance, Insurance companies and some of the available policies. I am neither qualified nor intend to advise anyone on this matter. Consider your needs, current situation and consult a professional before buying any insurance/investment products or investing in equity

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *