ஜீவன் அக்‌ஷய் ஆன்னுவிட்டித் திட்டம்

Image may contain: 2 people, people smiling
திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி முதலீடு செய்யும் போது எடுக்கப்பட்ட படம்

LIC யின் Jeevan Akshay குறித்து ஏற்கெனவே இங்கும் நாணயம் விகடனிலும் எழுதியிருக்கிறேன். முன்னாள் குடியரசுத் தலைவர் ப்ரணாப் முகர்ஜியும் சமீபத்தில் இதில் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீடு செய்ததால் இது நல்ல திட்டம் என்பதில்லை, இது நல்ல திட்டம் என்பதால் அவரும் முதலீடு செய்துள்ளார்

பழைய பதிவு – ஏற்கெனவே படிச்சவங்க ஸ்கிப் பண்ணிடுங்க

அறிவோம் ஆன்னுவிட்டி(Annuity )

வங்கிகளும், பிற நிறுவங்களும் நிரந்தர வைப்பு நிதிக்குத் தரும் வட்டியை நம்பியிருப்போருக்கு இது கடின காலம்.

கடந்த இருபது வருடங்களில் வைப்பு நிதியின் (ஃபிக்ஸ்ட் டெபாசிட்) வட்டி பாதியாக குறைந்துள்ளது. 1997ம் ஆண்டு தமிழகத்தில் ரிட்டையர் ஆன தம்பதியர் மாதம் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய்க்குள் வாழ முடிந்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லைஃப் ஸ்டைலுக்கு 25,000ரூ தேவைப்படும். அதாவது இருபது ஆண்டுகளில் விலைவாசி 4 – 5 மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் 1997ல் வங்கிகள் 12 -13 சதவீதமும் நிறுவனங்கள் 16 சதவீதமும் வழங்கி வந்தன. இன்றோ வங்கிகள் 6.5% வழங்குகின்றன. சுந்தரம் ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்கள் 7.25% வழங்குகின்றன ஆனால் அதிகபட்சமாக 3 அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டுமே டெபாசிட் பெறுகின்றன. இந்தியாவும் சந்தைப் பொருளாதார நாடாக மாறி வரும் நிலையில் வாங்கும் & வழங்கும் வட்டி இரண்டுமே இனி இறங்கு முகமாத்தான் இருக்க முடியும். கடன் வாங்கி வீடோ வண்டியோ வாங்க எத்தனிக்கும் இளம் வயதினருக்கு இது சாதகமாக இருந்தாலும் ரிட்டையர் ஆன அவங்க பெற்றோருக்கு இது பாதகமாகவே இருக்கும். 
அமெரிக்காவில் இன்று 10 வருட டெபாசிட்டுக்கு அதிக பட்சமாக 2.75% வட்டி, 5 வருசத்துக்கு 2% வட்டி. இந்தளவுக்கு குறையாவிட்டாலும் இந்தியாவில் வைப்பு நிதி வட்டி 5% அளவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. இப்படி குறைந்து கொண்டே வரும் நிலையில் வட்டியை நம்பியிருப்போர் என்ன செய்வது? இவர்களில் பலர் ஈக்விட்டியிலும் பாண்டிலும் பணத்தை போட விரும்புவதில்லை. இவர்களுக்கான தீர்வே ஆன்னுவிட்டி (Annuity) அல்லது ஆண்டுத் தொகை திட்டங்கள். 
முதலீட்டாளருக்கு வாழ்நாள் முழுதும் ஆண்டுத் தொகை வழங்கும் திட்டமே ஆன்னுவிட்டி. இவற்றை காப்பீடு நிறுவங்கள் மட்டுமே வழங்க முடியும். வங்கிகளில் பெற முடியாது. 
ஆன்னுவிட்டியில் ஃபிக்ஸ்ட் ஆன்னுவிட்டி, மாறக்கூடிய ஆன்னுவிட்டி (variable annuity), உடனடி ஆன்னுவிட்டி, பிற்கால ஆன்னுவிட்டி (deferred annuity), குறிப்பிட்ட சதவீதத்தில் அதிகரிக்கும் ஆன்னுவிட்டி என்று பல வகை உண்டு.

ஃபிக்ஸ்ட் ஆன்னுவிட்டியில் போடும் பணத்துக்கு முதலீட்டாளர் உயிருடனிருக்கும் வரையில் ஆண்டுத்தொகை வழங்கப்படும். முதலீடு செய்த அன்று நிர்ணயிக்கப்பட்ட வட்டி வாழ்நாள் முழுதும் மாறாது. அவருக்குப் பிறகு கணவனுக்கோ மனைவிக்கோ கிடைக்கும்படியும் செய்யலாம். முதலீட்டாளர் இறந்த பின் அவருடைய வாரிசுக்கு முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்கும் திட்டத்துக்கு கொஞ்சம் கம்மி வட்டியும், முதலீட்டை யாருக்கும் திருப்பித் தரத் தேவையில்லாத திட்டத்துக்கு அதிக வட்டியும் கிடைக்கும். 
நெறய பேருக்கு வாரிசுகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப்பின் பத்து, இருபது லட்ச ரூபாய் ஒரு பொருட்டாய் இருக்காது. ஆனால் உயிருடன் இருக்கும் வரையில் முதலீட்டாளருக்கு மாதம் அதிகம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பிள்ளைகள் கையை எதிர்நோக்கி இருக்காமல் இருக்க உதவும். இந்த மாதிரி கேட்டகரி முதலீட்டாளர்கள் திரும்ப பணம் வராத ஆன்னுவிட்டியை தெரிவு செய்யலாம். 
உடனடி ஆன்னுவிட்டியில், பணம் போட்ட அடுத்த வருடத்திலிருந்து ஆண்டுத் தொகை கிடைக்கும். 
பிற்கால ஆன்னுவிட்டியில் மாதாமாதம் அல்லது ஆண்டுக்கொரு முறை பணம் போட்டு வந்தால், ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு ஆண்டுத் தொகை கிடைக்கும்.
உயரும் ஆன்னுவிட்டியில் ஆண்டுத்தொகை குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்து கொண்டே வரும். 
ஆன்னுவிட்டியின் சாதகங்கள்
வங்கிகள் தரும் வட்டி குறைந்துவிடுமோ என்ற கவலையில்லை.
ஆண்டுக்கு 3% அதிகமாகிக்கொண்டே போகும் திட்டத்தில் பணம் போட்டால் விலைவாசி ஏற்றத்தையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம்

ஆன்னுவிட்டியின் பாதகம்
ஆன்னுவிட்டியில் போட்ட பணம் முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை திரும்பக் கிடைக்காது. வைப்பு நிதியைப் போல லிக்விடிட்டி கிடையாது.

இந்திய அரசு நிறுவனமான எல் ஐ சி வழங்கும் ஜீவன் அக்‌ஷய் ஓய்வூதியத் திட்டம் இப்போது பிரபலமாக உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கிகள் தரும் வட்டி விகிதம் குறைந்ததால் நிறைய பேர் இத்திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். மகாராஷ்ட்ர மாநிலம் தானேவில் ஒருவர் 100 கோடி ரூபாய் திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறார். 
ஜீவன் அக்‌ஷய் ஒரு உடனடி பென்சன் திட்டம். இந்த ஆண்டு பணம் போட்டால் அடுத்த ஆண்டிலிருந்து பணம் கிடைக்கும். இதில் 30 வயது முதல் 85 வயது வரை உள்ளோர் முதலீடு செய்யலாம். முதலீட்டாளரின் வயதுக்கும் அவர் தெரிவு செய்யும் திட்டத்துக்கும் ஏற்ப ஆண்டுத் தொகை நிர்ணயிக்கப் படுகிறது.

ஜீவன் அக்‌ஷய் ஏழு ஆப்சன்களை வழங்குறது
1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும். 
முதலீடு செய்பவரின் தேவைக்கேற்ப அவர் இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யலாம். ஒரு முறை தேர்ந்தெடுத்த பிறகு மாற்ற இயலாது. 
உதாரணத்துக்கு இன்னைக்கு ரிட்டையர் ஆகும் ஒருவர் தன் கையில் இருக்கும் 20 லட்ச ரூபாயில் பாதியை ஜீவன் அக்‌ஷயில் போடறார்னு வச்சிக்குவோம். 
அறுவது வயது மற்றும் ஆப்சன் ஆறுக்கு 8 சதவீதமும் ஆப்சன் ஏழுக்கு 7 சதவீதமும் கிடைக்கும். இப்போதைக்கு இது வங்கி வட்டியை விட கொஞ்சமே அதிகமா இருந்தாலும், இன்னும் பத்தாண்டுகள் கழித்து வங்கி வட்டி கீழே போனப்புறம் அது மிக அதிகமாகத் தெரியும்.

பங்குச்சந்தை, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாதவர்களுக்கு ஓய்வூதியத்துக்கு இருக்கும் தெரிவுகளில் இது மிக முக்கியமானது

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *