டெர்ம் பாலிசியில் தேவையற்ற செலவுகள்

எண்டோமெண்ட் பாலிசிகளில் அதிக லாபம் பார்த்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் டெர்ம் பாலிசியின் பக்கம் கவனத்தைத் திருப்பியதும் அதிலும் தேவையற்ற விசயங்களைப்புகுத்தி பணம் சம்பாதிக்க முயல்கின்றன. அதில் முக்கியமானது “ரிட்டர்ன் ஆஃப் ப்ரீமியம்” ரைடர். இதில் பயனர் காப்பீட்டு காலத்தில் இறக்காவிட்டால் அவர் கட்டிய ப்ரீமியம் தொகை திரும்பக் கிடைக்கும்

30 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு ஒரு கோடி டெர்ம் பாலிசி எடுத்தால் அவரோட ப்ரீமியம் ஆண்டுக்கு தோரயமாக 10,000 ரூபாய் வரும் அதுவே அவர் ப்ரீமியம் திரும்பக் கிடைக்கும் பாலிசி எடுத்தால் ப்ரீமியம் ஆண்டுக்கு 25,000 ரூபாய். அதாவது ஆண்டுக்கு 15,000 ரூபாய்.

பாலிசி முடிவில் அவர் இறக்கா விட்டால் அவருக்கு கிடைக்கும் தொகை 25000*30 = 7,50,000 ரூபாய். அதற்கு பதிலாக அவர் ப்யூர் டெர்ம் பாலிசி 10,000 ரூபாய்க்கு எடுத்துவிட்டு மிச்ச 15,000த்தை மாதம் 1250 ரூபாய் வீதம் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் 10% வளர்ச்சியில் 30 ஆண்டுகால முடிவில் அவருக்கு 28,25,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். 30 ஆண்டு என்பது மிக நீண்ட காலம் 10% வளர்ச்சி காண சாத்தியம் மிக அதிகம். வெறும் 6% வளர்ச்சி கண்டாலே அவரிடம் 12,55,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்.

காப்பீட்டுக்கு கட்டிய பணம் திரும்பக் கிடைக்கணும் என்கிற மனநிலையில் இருந்து வெளியே வந்து சிந்தித்தால் யாரும் இதைத் தெரிவு செய்ய மாட்டார்கள்.

தேவையற்ற இரண்டாவது எக்ஸ்ப்ரஸ் பே. 30 வயதாகும் நபர் 30 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு எடுக்கிறார். ஆண்டு தோறும் கட்டினால் 11,000 ரூபாய் கட்டினால் போதும் (இது வேறு நிறுவனம்). எதுக்கு சார் 30 வருசம் கட்டறீங்க? எட்டே வருசத்தில் கட்டினால் மொத்த ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கும் சீக்கிரமும் கட்டி முடிச்சிடலாம் என்று ஏஜெண்ட்கள் மூளைச் சலவை செய்வர். 
30 ஆண்டுகள் *11000 = 3,30,000
8 ஆண்டுகள் * 28261= 2,26,088 
மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் லாபமாகத் தோன்றும். ஆனால், அந்த எட்டு ஆண்டுகளும் நீங்கள் ஆண்டுக்கு 17,261 ரூபாய் அதிகமாகச் செலுத்துவீர்கள். இதையே மாதம் 1438 ரூபாயாக நல்ல மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் 8 ஆண்டுகள் முடிவில் உங்களிடம் 2,10,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். அதாவது ஒரு லட்ச ரூபாய் லாபத்தைப் பெற 2 லட்சத்துக்கும் மேல் இழக்கிறீர்கள். அப்படி 8 ஆண்டுகள் முதலீசு செய்து 2 லட்சத்துக்கும் சேர்த்தால், அதற்கப்புறம் அதிலிருந்து வரும் வட்டி அல்லது வளர்ச்சியிலிருந்தே ஆண்டுக்கு 11,000 எடுத்து ப்ரீமியமாக கட்டலாம்.

இந்த எக்ஸ்ப்ரஸ் பே இன்னும் ஒரு விதத்தில் நஷ்டமே தருகிறது. பாலிசிதாரர் ரெகுலர் பே முறையில் ப்ரீமியம் செலுத்தி வரும் போதும் 9 ம் ஆண்டு இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும், அவர் செலுத்திய ப்ரீமியம் 8*11000 = 88,000 ரூபாய் மட்டுமே. அதே அவர் எக்ஸ்ப்ரஸ் பே தெரிவு செய்தாலும் குடும்பத்துக்கு கிடைக்கப் போவது என்னவோ அதே ஒரு கோடிதான் ஆனால் அவர் 2,26,000 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி முடித்திருப்பார்.

பாலிசிதாரர், 55 வயதில் சீக்கிரமே ரிட்டையர் ஆகும் முடிவு எடுத்தால், அப்போது டெர்ம் பாலிசியை கேன்சல் செய்து விடலாம், அதற்கப்புறம் 5 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் எக்ஸ்ப்ரஸ் பே முறையில் 8 ஆண்டுகளில் முழு ப்ரீமியத்தையும் செலுத்தியிருந்தால், தேவையற்ற போதும் கவரேஜ் தொடர்ந்து கொண்டிருக்கும்

தேவையற்ற மூன்றாவது ரைடர் இரண்டாவது ரைடரைப் போன்றது ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே. 30 வயது ஆகும் நபர் 30 ஆண்டுகளுக்கு டெர்ம் பாலிசி எடுக்க விரும்புகிறார். அவருக்கு சொல்லப்படுவது – உங்களால் 30 ஆண்டுகள் ப்ரீமியம் கட்ட முடியும், 50 ஆண்டுகளுக்கு கவரேஜ் தர்றோம், நீங்க 30 ஆண்டுகள் ப்ரீமியம் கட்டினால் போதும் என்று. 30 ஆண்டுகள் பணம் கட்டி 50 ஆண்டுகள் கவரேஜ் பெருவது லாபம் என்று நினைத்துவிடாதீர்கள் – கம்பெனிகள் செய்வது மேலே கூறியது போன்றே – 50 ஆண்டுகளுக்கான ப்ரீமியத்தை உங்களிடமிருந்து 30 ஆண்டுகளில் வசூலித்து விடுவார்கள் – இதை வேண்டாம் என்று சொல்லக் காரணம் வேறு. எக்ஸ்ப்ரஸ் பே முறையில் பண நஷ்டம் மட்டுமே ஆனால் இந்த பாலிசி அடிப்படையிலேயே தவறு. ரிட்டையர் ஆன, வருமானம் ஈட்டாத யாருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை – 60 வயது முதல் 80 வயது வரை தேவையே படாத காப்பீட்டுக்கு 30 ஆண்டுகாலம் ப்ரீமியம் கட்டிக் கொண்டு இருப்பீர்கள்.

காப்பீடு என்பது செலவு, அது முதலீடு அல்ல, காப்பீட்டுக்கு கட்டிய பணம் திரும்ப வரவேண்டும். ரிட்டையர் ஆன பின்பும் 80-90 வயதில் இறந்தாலும் பணம் கிடைக்கணும் போன்ற எண்ணங்களை விட்டொழித்தால், தேவைப்படும் காலத்தில் தேவையான அளவு காப்பீடு பெறலாம்

Please follow and like us: