நல்ல கடன் – கெட்ட கடன்

ஏப்ரல் மாத மல்லிகை மகள் இதழில் வந்த என் கட்டுரை. 

Image may contain: 1 person

நல்ல கடன் – கெட்ட கடன்

பொதுவாக சிக்கனமாகச் செலவு செய்வதிலும் திட்டமிட்டு சேமிப்பதிலும் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்கள். இன்றைய சூழலில் குடும்பத்துக்காக கடன் வாங்கும் முடிவிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே பெண்கள் கடனும் கடன் சார்ந்த விசயங்களும் குறித்து தெளிவு பெற வேண்டியது அவசியம். 
”கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பது இதிகாச காலத்துக்கு வேணா சரியா இருந்திருக்கலாம், இன்றிருக்கும் மாடர்ன் எக்கானமியில் கடன் இல்லாத மனிதரைப் பார்ப்பது கடினம். தனிமனித வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கும் தொழில் அபிவிருத்திகும் கடன் அவசியமாகிறது. அத்தியாவசத்திற்கு கடன் வாங்கும் பழக்கம் மெல்ல மெல்ல ஆடம்பரத் தேவைகளுக்கு வாங்கும் போது அதுவே பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாகிறது.

கடனில் நல்ல கடன் கெட்ட கடன் என எப்படி பிரிப்பது? 
எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கறோமோ அது உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக இருந்தால் அது நல்ல கடன் 
கடன் வாங்கி நீங்க வாங்கும் பொருள் மதிப்பில் உயரும் தன்மையுடையதாக இருந்தால் அது நல்ல கடன் (Appreciation)
உங்க வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ ஒரு பொருள் அவசியமாகத் தேவைப்படுகிறது ஆனால் அதை வாங்க உங்களிடம் மொத்தமாகப் பணமில்லை, அதே நேரத்தில் அதற்கான தவணைத் தொகையை சுலபமாக உங்களால் செலுத்த முடியும் என்று வரும் போது அதற்காக வாங்குவதும் நல்ல கடனே
உதாரணத்துக்கு, விற்பனைத் துறையில் இருக்கும் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் அவசியம். வண்டியிருந்தால்தான் அவரது வேலையில் நீடிக்க முடியும், வருவாயைப் பெருக்க முடியும் என்கிற நிலையில் வாங்கும் வாகனக் கடன் நல்ல கடன்
கடன் இல்லாமல் வீடு வாங்குவது இன்று 99% பேருக்குச் சாத்தியமில்லை. வீட்டு வாடகை மிச்சமாகிறது, அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய பிரச்சனையில்லை, வாங்கிய வீட்டின் மதிப்பு உயரும் வாய்ப்பு இருக்கும், திருப்பிச் செலுத்தும் வட்டிக்கும் அசலுக்கும் வருமான வரி விலக்கு உண்டு (அசலுக்கான வரிவிலக்கு Section 80 C யின் கீழ் வரும்). இது சந்தேகமேயில்லாமல் நல்ல கடன்

உங்களுக்கோ உங்க பிள்ளைகளுக்கோ கல்விக்காக வாங்கும் கடனும் நல்ல கடனே. பணம் இல்லைன்னு படிப்பை நிறுத்தாமல் கடன் வாங்கியாவது படிப்பைத் தொடர்வது நல்ல எதிர்காலத்தை உறுதி செய்யும். அடிப்படைக் கல்வி, உயர் கல்வி, Certification போன்றவற்றுக்காக கடன் வாங்குவதில் தவறேயில்லை.

லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தில் திடீரென சமையல் அடுப்போ, கிரைண்டரோ, ஃபிரிட்ஜோ பழுதாகி புதிதாக வாங்க வேண்டிய நிலையில் மொத்தப்பணம் கொடுத்து வாங்க முடியலேன்னா தவணை முறையில் வாங்கித்தான் ஆகவேண்டும். வீட்டு உபயோகப் பொருட்கள் இல்லையென்றால் நிம்மதியாக வாழ முடியாதப்போ அது நல்ல கடனா இல்லையா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது

இவற்றைத் தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்துமே கெட்ட கடன்கள்தான் 
ஏற்கெனவே வருமானம் முழுமைக்கும் செலவும் பல கடன்களும் வைத்திருக்கும் ஒரு நடுத்தர குடும்பம் காருக்காக கடன் வாங்குவது ஆடம்பரம். அது அநாவசியம் 
சுற்றுலாவுக்கோ வேறு தேவையற்ற செலவுக்கோ பர்சனல் லோன் வாங்குவது கெட்ட கடன். வங்கிகள் பர்சனல் லோனுக்கு பொதுவா 14 முதல் 18 % வரை வட்டி வாங்குகின்றன. டாக்குமெண்டேசன், ப்ராசஸிங்னு தனியா 2% வேற வாங்குறங்க. நீங்க வாங்கும் ஒரு லட்ச ரூபாய் பர்சனல் லோனுக்கு 5 வருசத்தில் 1.5 லட்சரூபாய் திருப்பிச் செலுத்துவீங்க. லோனுக்கு கட்டும் 2500 ரூபாயை நல்ல முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் மூணே வருசத்தில் உங்க கிட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும், அப்ப நீங்க வாங்க நினைச்சதை முழுப்பணம் தர்றேன்னு பேரம் பேசி வாங்கலாம். இப்படி செய்யும் போது உங்களோட ரெண்டு வருட சேமிப்பு மிச்சமாகிறது.

இதே போல 0% வட்டின்னு வரும் விளம்பரங்களை நம்பி தேவையற்ற / அத்தியாவசிமற்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதும் கெட்ட கடனே. 
வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜோ வாஷிங் மெசினோ நல்லா வேலை செய்யும் போது புது மாடல் வருது, வட்டியில்லாமல் கிடைக்குது என்று வாங்குவது தேவையற்ற செலவு. பழைய பொருள் இன்னும் மூணு வருசம் வேலை செய்யும், இந்த நேரத்தில் மாசம் 500 ரூபாயை தொடர் முதலீடு செய்து வந்தால் அப்பொருளை கண்டிப்பாக மாற்ற வேண்டிய நேரத்தில் முழுப்பணம் கொடுத்தே வாங்கலாம். 
பரவி வரும் மற்றொரு மோசமான பழக்கம் ஆண்டுக்கொருமுறை செல்போனை மாற்றுவது அதுவும் மாதத்தவணையில். செல்போன்களை சுலபமாக 5 ஆண்டுகள் உபயோகிக்கலாம். ஆண்டுக்கொருமுறை செல் போன் மாற்றுவதே தவறு, அதையும் கடனில் வாங்குவது மிக ஆபத்தான போக்கு

0% வட்டி என்பது பெருமாலான நேரங்களில் ஏமாற்று வேலையே. கன்ஸ்யூமர் லோன்களுக்கான வட்டி 18%க்கும் மேல் இருக்கும். அது உங்களுக்குத் தெரியாத வகையில் பெறப்படும். ஒரு நிறுவனம் ஒரு பொருளை 15,000 ரூபாய் என்றும் மாதம் 500 வீதம் 30 மாதங்கள் செலுத்தலாம் என்றும் விளம்பரம் செய்யும். அதே பொருளை வேறு டீலரிடமோ அமேசானிலோ நீங்கள் 10,000 ரூபாய்க்கு ரொக்கத்துக்கு வாங்க முடியும். சொல்வது 0% செலுத்துவது 18% ஆக இருக்கும்.

இவற்றையெல்லாம் விட மோசமான கடன் என்றால் அது க்ரெடிட் கார்ட் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான். க்ரெடிட் கார்ட் கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா? 36%. ரிவால்விங் க்ரெடிட் எனும் சூழலில் சிக்கிச் சீரந்தழிந்தவர்கள் ஏராளம்.

கடன் வாங்குவதற்கு முன்னால் ஒரு விசயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். தவணை முறையில் பொருள் வாங்குவதன் மூலம் உங்க எதிர்கால வருமானத்தை இன்றே செலவு செய்கிறீர்கள். அதற்கு கடன் வாங்குவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டு உழைப்பையும் சேமிப்பையும் வங்கிக்கு தாரை வார்க்கிறீர்கள். கடன் வாங்கும் முன் கடன்பட்டாவது வாங்க வேண்டிய அளவுக்கு அந்தப் பொருள் தகுதியானதா என்று சிந்தித்துப்பாருங்கள். 
கடன் வாங்குவதற்கு முன்னால், மாதத்தவணையை கட்டும் அளவுக்கு உங்க வருமானமும் செலவுகளும் உள்ளனவா என்பதையும் பணத்தைத் திருப்பிக் கட்டத் தெளிவான திட்டம் இருப்பதையும் உறுதிசெய்யுங்கள். கடனை சீக்கிரமே திருப்பிக் கட்டினால் பெனால்டி உள்ளதா என்று கேளுங்கள். Pre Closure Penalty இல்லாத கடனை மட்டுமே வாங்கி அதையும் சீக்கிரமே அடைத்து வட்டியை மிச்சப்படுத்துங்கள்.

கெட்ட கடன் தவிர்த்து நல்ல கடன் நாடி வளமான எதிர்காலத்துக்கு திட்டமிட்டு சேமியுங்கள்

Please follow and like us:

1 thought on “நல்ல கடன் – கெட்ட கடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *