புதிய தலைமுறையில் கேள்வி பதில்

Image may contain: 2 people, people smilingஎனக்கு நாற்பது வயது வரை கல்யாணப் பத்திரிக்கை தவிர வேறு எந்தப் பத்திரிக்கையிலும் பேர் வந்ததில்லை. சின்ன வயதில் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்பின எந்தக் கேள்வியும் பிரசுரமானதில்லை.

ஆயுள் காப்பீடு குறித்து புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு வந்த கேள்வி இது. அதுக்கு என் கிட்ட பதில் கிடைக்கும்னும் எப்படி நண்பர் Justin Durai நம்பினார்னு தெரியல. கேள்வி கூட பிரசுரம் ஆகாத எனக்கு பதில் சொல்லும் வாய்ப்பளித்த நண்பருக்கு நன்றி.

கேள்வி : எனக்கு வயது 40. இதுவரை இரண்டு மூன்று முறை வெவ்வேறு இன்ஸ்யூரன்ஸ் எடுத்தும் அதை தொடர முடியாமல் பாதியில் விட்டு அந்த பணம் வீணாகிவிட்டது. மூன்று வருடம் தொடர்ந்து கட்டாவிட்டால் பணம் திரும்ப கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எந்த இன்ஸ்யூரன்ஸும் என்னிடம் இல்லை. இனிமேல் எடுப்பது பயன் தருமா? அப்படியெனில் எந்த மாதிரியான இன்ஸ்யூரன்ஸ் (எண்டோன்மெண்ட், டேர்ம்) எடுப்பது? அல்லது சேமிப்பு, முதலீடு என்று யோசிப்பது நல்லதா? ஆலோசனை தாருங்கள்.

க. ராஜேஸ்வரி, சென்னை

என்னுடைய பதில்

அன்புள்ள ராஜேஸ்வரி

நாற்பது வயது என்பது வருமானம் ஈட்டுவோருக்கு ஆயுள் காப்பீடு அத்தியாவசியமான காலகட்டம். நாற்பதுகளில்தான் பொதுவாக கமிட்மெண்ட்ஸ் அதிகம் இருக்கும்.
பள்ளி செல்லும் பிள்ளைகள், வீட்டுக் கடன் இ எம் ஐ, வாகனக் கடன் என்று இந்த வயதில்தான் பொருளாதாரத் தேவை அதிகம் இருக்கும். நாற்பது முதல் ஓய்வுபெறும் வயது வரை
(60 அல்லது 65) இருக்குமாறு ஒரு ஆயுள் காப்பீடு நாப்பது வயதில் இருக்கும் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்,

ஒரு வண்டியை இன்சூர் செய்கிறீர்கள், அந்த ஆண்டில் வண்டிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கும், விபத்து நேராவிட்டாலும் காப்பீட்டு நிறுவனம் பணம் தர
வேண்டும் என்று நீங்க எதிர்பார்ப்பதில்லை, ஆனால் ஆயுள் காப்பீடு எடுத்தவர் காப்பீட்டு காலத்தில் இறக்கா விட்டாலும் பணம் கிடைக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? காப்பீடு மற்றும்
முதலீட்டை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள், இவை இரண்டும் வெவ்வேறு. ஆண்டுக்கு 6 லட்சரூபாய் வருமானம் உள்ள ஒருவர் திடீரென இறந்தால் அவர் குடும்பம் அதே லைஃப் ஸ்டைல்
தொடர குறைந்தபட்சமாக 60 முதல் 90 லட்ச ரூபாயாவது தேவைப்படும். அத்தொகை இருந்தால்தான் அதை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு அக்குடும்பம் வாழ முடியும். வெறும் பத்து
லட்சரூபாய்கள் காப்பிடு இருந்தால் அதை வைத்துக்கொண்டு 2-3 ஆண்டுகள் மட்டுமே குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியும். வருமானத்தின் 10 மடங்கு அளவுக்கு காப்பீட்டை எண்டோமெண்ட் பாலிசியில் பெற
முடியாது ஏனென்றால் அதற்கு ப்ரீமியம் மிக மிக அதிகமாக இருக்கும். இந்த அளவுக்கு காப்பீடு டெர்ம் பாலிசியில் மட்டுமே சாத்தியம்.

நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்களா? அல்லது சுயதொழில் மூலம் வருவாய் இருக்கிறதா என்று சொல்லவில்லை. உங்களுக்கு வருமானம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை
டெர்ம் பாலிசி எடுங்கள். அதை அரசு நிறுவனமான எல் ஐ சியிலோ அல்லது ஏதேனும் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திலோ எடுக்கலாம். ஒரு வேளை நீங்கள் வேலைக்குப் போகாத
குடும்பத் தலைவியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கணவருக்கு டெர்ம் பாலிசி எடுங்கள். இதற்கு ப்ரீமியம் குறைவே. 40 வயது பெண்மணி, 50 லட்ச ரூபாய் காப்பீடு 25 ஆண்டு காலம் – இதற்கு
ஆகும் ஆண்டு ப்ரீமியம் வெறும் 14600 ரூபாய்தான். தனியார் நிறுவனங்களில் இதற்கும் குறைவாகவே இருக்கும். காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசி எடுத்து விட்டு சேமிப்புக்கு மியூச்சுவல் ஃபண்ட்,
வங்கி வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, தங்கமகள் சேமிப்புத் திட்டம், புதிய பென்சன் திட்டம், பி பி எஃப் போன்றவற்றை தேர்ந்தெடுங்கள். உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

Please follow and like us: