முதியோர் காப்பீடு திட்டங்கள்

முதியோரை குறிவைக்கும் காப்பீட்டு நிறுவனங்கள்
கடந்த சில ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ரிட்டையர் ஆகும் சீனியர் சிட்டிசன்களை குறிவைத்து ஏமாற்றுவதாக கேள்விப்படுகிறேன்.

அரசு, அரசு சார் நிறுவனங்களிலிருந்து, பள்ளி & கல்லூரிகளிலிருந்தும் ஓய்வு பெறுவோரின் பென்சன் அக்கவுண்ட் ஒரு வங்கியிடம் வருகிறது. அதன் மூலம் சமீபத்தில் ஒய்வு பெற்றோரின் தகவல்கள் வங்கிக்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட எல்லா வங்கியும் ஒரு இன்சூரன்ஸ் டிவிசனோ அல்லது டைஅப்போ வைத்திருக்கிறது. ரிட்டையர் ஆகும் சமயத்தில் பெரும் தொகையும் அதற்கப்புறம் வரும் பென்சன் அளவையும் அறிந்த வங்கியும் காப்பீட்டு நிறுவனமும் அவர்களிடம் நைச்சியமாகப் பேசி பணத்தை ஆட்டையைப் போடுகிறார்களாம்.

சார் நீங்க நல்ல போஸ்ட்லேருந்து ரிட்டையர் ஆகியிருக்கீங்க, உங்களைப் போன்றோர் எங்க இன்சூரன்ஸ் கம்பெனியின் Brand Ambassador ஆனா எங்களுக்குப் பெருமை என்று தூண்டில் போடுவார்கள். பொதுவா ரிட்டையர் ஆனவுடன் இனி நம்மால் யாருக்கும் பிரயோசனமில்லை என்று தோன்றுவது இயல்பு. Brand Ambassador என்று புளகாங்கிதமடைந்து கேள்வி ஏதும் கேட்காமல் ஒத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். கையில் இருக்கும் பணத்தை இன்சூரன்ஸ் முதலீட்டில் போடவும், பென்சனில் பெரும்பகுதியை எண்டோமெண்ட் பாலிசிக்கு ப்ரீமியமாகப் பிடுங்கவும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பாலிசி விற்கவும் ஏஜெண்ட் ஆக்கப்படுகிறீர்கள் என்பதே உண்மை.

ரிட்டையர் ஆனப்புறம் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் ஏதேனும் ஒரு வழியில் வருமானம் ஈட்டுவதில் தவறில்லை. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆவது உங்க விருப்பம் என்றால் அதிலும் தவறில்லை. மேனேஜர் பேச்சில் மயங்கும் முன்னர் அவரிடம் சில கேள்விகள் கேளுங்க

1. Brand Ambassadorகள் நேரடி விற்பனை செய்யத் தேவையில்லை. நானும் நேரடி விற்பனை செய்தால் அதற்கான வருமானம் தனி. Brand Ambassador ஆக இருப்பதற்கு என்ன சம்பளம் தருவீர்கள்?

2. நான் ரிட்டையர் ஆகி விட்டதால் எனக்கு இனி ஆயுள் காப்பீடு தேவையில்லை. எவ்வித ஆயுள் காப்பீடு பாலிசியும் எடுக்க மாட்டேன். குடும்பத்தார், உறவினர் மற்றும் நண்பர்கள் பாலிசி எடுப்பது அவரவர் விருப்பம். அவர்கள் பட்டியலை கொடுக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது, சம்மதமா?

3. ரிட்டையர் ஆகும் போது கிடைத்த பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று முடிவு செய்துவிட்டேன், அத்திட்டத்தில் இன்சூரன்ஸ் முதலீடு இல்லை. என்னை எந்த எண்டோமெண்ட், யூலிப் திட்டத்திலும் முதலீடு செய்ய வற்புறுத்தக் கூடாது, சம்மதமா?

இவற்றுக்கு வங்கி மற்றும் அதன் காப்பீட்டு பிரதிநிதி சொல்லும் பதில்களே அவர்களின் நோக்கத்தை உங்களுக்குச் சொல்லிவிடும்.

சரி, ஓய்வு பெற்றோர் முதலீட்டுக்கு என்ன செய்யலாம்

முதியோருக்கான முதலீட்டு வாய்ப்புகள்


நம் அப்பாவும் தாத்தாவும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற போது வந்த பணத்தை இந்தியன் வங்கியிலோ சுந்தரம் ஃபைனாஸிலோ போட்டுவிட்டு வந்த வட்டியில் வாழ முடிந்தது. 15% வட்டி, போட்ட பணம் 5 வருடங்களில் இரட்டிப்பான காலமெல்லாம் போய் இப்ப சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி 7.25% ல வந்து நிக்குது. வரும் காலங்களில் இது இன்னும் குறையும் என எதிர்பாக்கலாம்.

ஓய்வு பெற்றவர்களில் பலரும் பங்குச் சந்தை குறித்து அறிமுகம் இல்லாதவர்கள். ஈக்விட்டியிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அவர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் என்னென்ன?

1. Fixed Deposit with Non Banking Financial Companies :

வைப்பு நிதி என்பது வங்கிகளால் மட்டும் வழங்கப்படுவதல்ல. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட பல நிறுவங்கள் 5 ஆண்டுகள் வரை வைப்பு நிதி பெறுகின்றன. இவை வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகின்றன

பஜாஜ் ஃபைனான்ஸ் 8.75% எல் ஐ சி ஹவுசிங் – 8.1 %, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் 9%, மஹிந்த்ரா நிறுவனம் 8.85%, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் 9.1% ஆகியவை சில உதாரணங்கள் (இவை சீனியர் சிட்டிசன்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும் திட்டங்கள, மாதாமாதம் வட்டி வேணும்னா கொஞ்சம் கம்மியாகும்.ஆண்டுக்கொருமுறை வட்டி வங்கிக்கு வருமாறு செய்துவிட்டு மாதாமாதம் எடுத்துக்கொள்வது அதிக நன்மை பயக்கும்)

சாதகம் : வங்கியை விட அதிக வட்டி
பாதகம் : வங்கிகளை விட பாதுகாப்பு கொஞ்சம் குறைவு என்று சொல்லலாம். வங்கிகள் போற போக்கைப் பாத்தா அதுவும் பாதகமாத் தெரியல

2. பிரதம மந்திரி வய வந்தன யோஜ்னா:


60 வயது மேற்பட்டோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம். எல் ஐ சி வழியாக வழங்கப் படுகிறது

காலம் : 10 ஆண்டுகள்
வட்டி : மாத வட்டிக்கு 8%, ஆண்டுக்கு ஒரு முறை வாங்கினால் 8.3%
அதிக பட்ச முதலீடு : 15 லட்சம்
நடுவில் டெபாசிட்டை உடைக்க முடியாது, ஆனா 3 ஆண்டுகளுக்குப் பிறகு 75% கடன் பெற்றுக் கொள்ளலாம்

சாதகங்கள் : 10 ஆண்டுகளுக்கு 8.3% வட்டி தரும் திட்டம் வேறு எதுவும் இன்று இல்லை
மத்திய அரசின் திட்டம் ஆதலால் பாதுகாப்பு மிக அதிகம்
வட்டி குறையாமல் 10 ஆண்டுகளும் இருக்கும்

பாதகங்கள் : வங்கிகளில் செய்வது போல டெபாசிட்டை உடைக்க முடியாது
15 லட்சம் வரைதான் இதில் முதலீடு செய்ய முடியும்

3. சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம்


60 வயதுக்கு மேற்பட்டோரும் வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிய 55 வயதுக்கு மேற்பட்டோரும் முதலீடு செய்யலாம்

9% வட்டியில் ஆரம்பிச்சது இப்ப 8.3% த்தில் வந்து நிக்குது

வங்கிகள் மூலமோ, தபால் அலுவலகம் மூலமோ முதலீடு செய்யலாம்

15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்

காலம் : 5 ஆண்டுகள், அப்புறம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்

ஒரு வருடம் கழித்து Pre Mature Withdrawal செய்யலாம் (கட்டணம் உண்டு)

சாதகங்கள்
வங்கியை விட அதிக வட்டி
செக்சன் 80 C யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு

பாதகம் : வட்டி நிர்ணயம் இல்லை, ஆண்டுக்கொரு முறை வரி மாற்றி அமைக்கப்படும். குறைந்து கொண்டே வரும் என நினைக்கிறேன்

4. எல் ஐ சியின் ஜீவன் அக்‌ஷய் & ஜீவன் சாந்தி ஆன்னுவிட்டி திட்டங்கள்


இது ஒரு வகை பென்சன் திட்டம். உலகிலுள்ள பெரும்பான்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் Annuity என்ற பென்சன் திட்டத்தை வழங்குகின்றன. நான்றிந்த வரையில் ஜீவன் அக்‌ஷய் / ஜீவன் சாந்தி அளவுக்கு பென்சன் வழங்கும் Annuity வேறு எதுவுமில்லை

முதலீட்டுத் தொகை : எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

இத்திட்டம் முதியோருக்கு மட்டுமல்ல, யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். வாழ் நாள் முழுதும் மாறாத (குறையாத) பென்சன் தரும் திட்டம் என்பதால் இதை இங்கு சேர்த்தேன்

முதலீடுத்தொகை, வயது, எல் ஐ சி தரும் 7 ஆப்சன்கள் இவற்றிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும். 60 வயதுக்கு மேற்பட்டோர் எடுக்கும் ஆப்சனுக்கு ஏற்ப 7-8% எதிர்பார்க்கலாம்

1. ஆயுள்காலம் முழுதும் ஒரே தொகை, முதல் திரும்பக் கிடைக்காது
2. 5 /10/15 / 20 ஆண்டுகாலம் ஒரே தொகை, அதற்கப்புறமும் முதலீட்டாளர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மிச்ச காலத்துக்கு வழங்கப்படும். முதல் திரும்பக் கிடைக்காது
3. உயிருடன் உள்ள வரை ஒரே தொகை. இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்
4. ஆயுள் காலம் முழுதும் பென்சன். அது ஆண்டுக்கு 3% உயர்ந்து கொண்டே போகும். முதல் திரும்ப வராது
5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு 50% பென்சன். முதல் திரும்ப வராது
6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். முதல் திரும்ப வராது
7. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்சன், அவருக்கப்புறம் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கும் அதே 100% பென்சன். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்கும்.
இவையே அந்த 7 ஆப்சன்கள்
சாதகம் : இன்று ரிட்டையர் ஆகும் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகள் உயிருடன் இருப்பார் என எதிர்பார்க்கலாம். இன்னும் 5-10 ஆண்டுகள் கழித்து இன்று இருக்கும் வட்டி விகிதம் இருக்காது. இந்த ஒரு திட்டம் மட்டும் தான் வாழ் நாள் முழுதும் குறிப்பிட்ட வட்டி கேரண்டீட் தருகிறது.
முதலீட்டுத் தொகைக்கு சீலிங் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்
பாதகம் : உங்க வாழ் நாளில் பணம் திரும்ப வராது, வட்டி மட்டுமே வரும். மூன்றாவது & ஏழாவது ஆப்சனில் மட்டும் உங்க வாரிசுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்

5. மத்திய அரசின் 7.75% கடன் பத்திரம்


பேரே இதன் முழு விவரங்களையும் சொல்லிவிடும்
இது ஒரு கடன் பத்திரம், மத்திய அரசால் வழங்கப்படுவது

இதுவும் சீனியர் சிட்டிசன்கள் மட்டுமன்றி எல்லாருக்குமான முதலீடு. வங்கிகளை விட சிறிது அதிக வட்டி மற்றும் மத்திய அரசு கடன் பத்திரம் என்பதால் அதிக பாதுகாப்பு – இவ்விரு காரணங்களால் இதையும் இங்கு பட்டியலிட்டேன்.

வட்டி : ஆண்டுக்கு 7.75%
எவ்வளவு முதலீடு செய்யலாம் : உச்சவரம்பு இல்லை
முதலீட்டு காலம் : முதலீடு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பக் கிடைக்கும் – இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது

60 முதல் 70 வயதானவர்கள் 6 ஆண்டுகளுக்குப்பிறகும்
70 முதல் 80 வயதானவர்கள் 5 ஆண்டுகளுக்குப்பிறகும்
80 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆண்டுகளுக்குப்பிறகும் பணம் திரும்பப் பெறலாம்.

சாதகம் : வங்கிகளை விட சிறிது அதிக வட்டி
பாதகங்கள் : குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் திரும்பப் பெற முடியாது
இக்கடன் பத்திரங்கள் டீமேட் அக்கவுண்ட் மூலமே வழங்கப்படுகின்றன. டீமேட் அக்கவுண்ட் இல்லாதவர்கள் இதற்காக மட்டும் டீமேட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.

இவை தவிர, போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் ஸ்கீம்னு ஒண்ணு இருக்கு. அதில் ஒரு வருஷத்துக்கு 6.6%, ரெண்டு வருசத்துக்கு 6.7% மூணு வருஷத்துக்கு 6.9%, அஞ்சு வருசத்துக்கு 7.4% வட்டி வழங்கப் படுகிறது. இது வங்கி வட்டியை ஒத்திருப்பத்தால் இது குறித்து பெரிசா எழுத ஒன்றுமில்லை.

மாதாந்திர வட்டி தேவைப்படாதவர்கள் பெரும்பாலும் Cumulative Deposit செய்வார்கள். அதில் வரும் மொத்த வட்டிக்கும் வருமான வரி உண்டு. கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும்னா – கையிருப்பை இதில் ஏதாவது ஒரு வைப்பு நிதியில் போட்டு அதில் வரும் வட்டியை மட்டும் ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் முடிவில் Cumulative Deposit மூலம் பெறுவதை விட அதிகம் பெற வாய்ப்பு அதிகம்.

ஓய்வு பெற்றபின்னும் ஏதேனும் வேலை செய்வது ஓகே, உங்க வங்கியில் பேசி இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆவது உங்க விருப்பம், ஆனா அந்நிறுவனம் உங்க வாழ்நாள் சேமிப்பை ஆட்டையைப் போட்டுவிடாமல் பாத்துக்கோங்க.

Image result for retirement savings
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *