வேண்டாத காப்பீட்டு பாலிசிகளை என்ன செய்வது?

தெரியாமல் எடுத்துவிட்ட எண்டோமெண்ட் பாலிசியை என்ன செய்வது?

நான் அதிகம் எதிர்கொண்ட கேள்விகளின் பட்டியலில் டாப் 3யில் இக்கேள்வி இடம்பெறும். ஜீவன் ஆனந்த் அல்லது வேறொரு எண்டோமெண்ட் பாலிசி எடுத்துவிட்டேன். இப்பத்தான் புரியது அது ஒரு தேவையற்ற பாலிசி என்று. ஆனா பாலிசி எடுத்து சில பல வருசங்கள் ஆச்சு, வெறும் அஞ்சு லட்சத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்டிக்கிட்டு வர்றேன், அதே ப்ரீமியத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக டெர்ம் பாலிசி கிடைக்குது, அதை எடுத்து குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்னா, ரெண்டு பாலிசிக்கும் பணம் கட்ட முடியாது அல்லது ரெண்டு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்துட்டேன், இனி ஜீவன் ஆனந்த தரும் 5 லட்ச ரூபாய் கவரேஜுக்கு அர்த்தமேயில்லை, அந்த பாலிசியை என்ன செய்யட்டும் என்று கேட்போர் அனேகம்.

இந்நிலையில் இருப்போருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன

1. முதல் தெரிவு பாலிசி கேன்சல் செய்வது. பாலிசி எடுத்து மூன்றாண்டுகள் கூட ஆகலேன்னா, கட்டிய பணம் முழுதும் போய்விடும், எதுவும் கிடைக்காது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் கிடைக்காது, அப்புறம் கட்டிய ப்ரீமியங்களின் 30% திரும்பக் கிடைக்கும், அதற்கப்புறம் போனஸ் ஏதாவது இருந்தால், அதுவும் கிடைக்கும். உதாரணத்த்துக்கு 20,000 ஆண்டு ப்ரீமியம் 5 ஆண்டுகள் கட்டியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சமிருக்கும் 80 ஆயிரத்தின் 30% 24,000 ரூபாயும் போனஸ் இருந்தால் அதுவும் கிடைக்கும்.

2. ரெண்டாவது தெரிவு, பாலிசியை கடைசி வரை தொடர்வது. காப்பீடாகவும் பிரயோசனமில்லை, முதலீடாவகும் பிரயோசமில்லை என்று தெரிந்தும் ஆரம்பிச்சதை விட வேண்டாம் என தொடர்வது

3. இவை இரண்டுக்கும் இடையில் அதிகம் அறியப்படாத “Paid Up” Policy Option. அதாவது பாலிசியை கேன்சலும் செய்யாமல் தொடர்ந்து இறுதி வரை ப்ரீமியமும் செலுத்தாமல் இருக்க வகை செய்யும் தெரிவு இது.

தேவைப்படாத பாலிசியை கேன்சல் செய்யாமல் “Paid Up” ஆக மாற்றுவதன் மூலம் கட்டியபணத்திற்கு இழப்பு ஏதும் ஏற்படாது, இனிமேல் கட்ட வேண்டிய ப்ரீமியம் எதையும் கட்ட வேண்டியதில்லை. பாலிசியின் முதிர்வு வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், கட்டிய தொகையும் அதற்குண்டான போனஸும் கிடைக்கும்.
ஒரு உதாரணம் – பாலிசி எடுத்த போது வயது 23, தற்போது 26, காப்பீட்டுத் தொகை 12 லட்சம், காப்பீட்டின் காலம் 21 ஆண்டுகள், காலாண்டு ப்ரீமியம் 15 ஆயிரம் ரூபாய்கள். இப்ப இவருக்கான தெரிவுகள்

அ. மூன்றாண்டுகள் முடியும் வரை காத்திருந்து பாலிசியை கேன்சல் செய்வது. அப்படிச் செய்தால், மூன்றாண்டுகளுக்கான ப்ரீமியம் 1.8 லட்சத்தில் முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சம் இருப்பதில் 30% அதாவது 36,000 ரூபாய் கையில் கிடைக்கும்

ஆ. பாலிசியை உடனே “Paid Up”ஆக மாற்றினால் இப்போது பணம் ஏதும் கிடைக்காது, காப்பீட்டு காலத்தில் மிச்சம் இருப்பது 18 ஆண்டுகள், இதன் முடிவில் (தற்போதைய போனஸ் நிலவரப்படி) தோராயமாக 2 லட்ச ரூபாய் கிடைக்கும்.

கேன்சல் செய்து இன்று கிடைக்கும் 36,000 ரூபாயை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 18 ஆண்டுகள் முடிவில் 3 லட்ச ரூபாய் இருக்க வாய்ப்பு அதிகம். நிச்சயமில்லாத நாளைய லாபத்துக்காக இன்று நிச்சயமாக நிகழக்கூடிய நஷ்டத்தை ஏற்க விருப்பமில்லாதோருக்கு இந்த “Paid Up” பாலிசி தெரிவு நல்ல முடிவாக இருக்கும்

என் கருத்தில், பாலிசியின் ஆரம்ப காலத்தில் இருப்போர் (பாலிசி ஆரம்பிச்சு 5 ஆண்டுகள், இன்னும் 15 – 20 ஆண்டுகள் இருக்கு) பாலிசியை கேன்சல் செய்து விட்டு பணத்தை மியூச்சுவல் ஃப்ண்டில் முதலீடு செய்வது சரியா இருக்கும்

பாலிசி ஆரம்பிச்சு பல வருடங்கள் ஆச்சு இன்னும் 2-3 வருசங்களே இருக்கு பாலிசி முதிர்ச்சி அடைய என்பவர்கள், அந்த சில ஆண்டுகளும் ப்ரீமியம் கட்டி மொத்தமா போனஸ் பெறுவது மியூச்சுவல் ஃபண்டுக்கு மாற்றுவதை விடவும் பெயிட் அப் மாற்றுவதை விடவும் அதிக பலன தரும்

இவை இரண்டுக்கும் இடையில் இருப்போருக்கு (ஆரம்பிச்சு 7 – 8 -10 வருசம் ஆச்சு இன்னும் 10 வருசம் இருக்கு) பெயிட் அப் தெரிவு சரியாக இருக்கும்

Please follow and like us: