ULIP திட்டங்கள் ஏன் வேண்டாம்

முன்பெல்லாம் ஒரு தொழில் செய்பவர்கள் வேறு கடை போட மாட்டாங்க, இப்பொழுதோ நிலைமை வேறு. பாத்திரக் கடை வச்சிருந்த சரவணா ஸ்டோர்ஸ் இப்ப பத்து கடை ஆக்கிட்டாங்க.
இது போல மளிகை சாமான் விற்கும் கடை அதற்கு எதிரே தங்கநகைக் கடையும் வச்சிருக்கு. நீங்களும் வாழ்க்கைக்கு அவசியமான மளிகை வாங்கலாம்னு போறீங்க. கடை முதலாளி என்ன சொல்லணும்? எதிரே இருக்கும் தங்க நகைக் கடையும் எங்களுதுதான், சீட்டு போட்டீங்கன்னா அப்புறம் தங்கம் வாங்கிக்கலாம், இங்கயும் அங்கயும் கஸ்டமரா இருந்தா டிஸ்கவுண்ட் கிடைக்கும் – இப்படித்தானே சொல்லணும்? 
அதை விடுத்து அவர் உங்களுக்கு எவ்வளவு அரிசி மாசத்துக்கு வேணும்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம அவரா ஒரு ப்ளான் சொல்றார் – அதன்படி மாசாமாசம் நீங்க மளிகைக் கடையில் அம்பதாயிரம் ரூபாய் செலுத்தணும். அப்படிச் செலுத்தினா உங்க மாதாந்திர அரிசி தேவையின் 10% கிடைக்கும் அதுவும் இரண்டு மூணு மடங்கு விலையில். நீங்க கொடுக்கும் பணத்தில் அரிசிக்கான பணம், அது தவிர கமிசன், மேலும் இந்தக் கடையிலிருந்து அந்தக் கடைக்கு பணத்தை எடுத்துச் செல்ல ஒரு சார்ஜ், இது தவிர நகைக் கடைக்கான சார்ஜ் எல்லாம் போக மிச்சமிருக்கும் பணத்துக்கு குறிப்பிட்ட ஒரே ஒரு வகை நகை வாங்கிக்கலாம். உங்களுக்காக ஒரு சகாயம் பண்றேன், நீங்க எப்ப வேணா இதிலேருந்து விலகிக்கலாம் அப்படி விலகினால் நாங்க கொடுக்கறத வாங்கிக்கிட்டுப் போங்க – இப்படி ஒரு ப்ளான் சொன்னா அதில் பணம் போடுவீங்களா? 
ஒரு வேளை மளிகைக் கடைக்காரரோ அல்லது அவருக்கு ஏஜெண்டா கடையில் வேலை செய்பவரோ யாரோ ஒருத்தரின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி பிரச்சனையின் தீவிரம் புரியாம சேந்துடறீங்கன்னு வைங்க.. ரெண்டு வருசம் கழிச்சு மளிகை பிசினசும் நகை பிசினசும் நல்லாத் தெரிஞ்சவங்க நீங்க செய்தது தவறு. முதல் பிரச்சனை உங்களுக்குத் தேவையான அரிசி இத்திட்டத்தில் கிடைக்காது. மேலும் நீங்க செலுத்தும் தொகையில் சொற்பமே உங்க நகைச் சேமிப்புக்குப் போகுது. அந்த கொஞ்ச நகையிலும் உங்க சாய்ஸ் கம்மி. தேவையான அளவு அரிசி மட்டும் மளிகையில் வாங்கிட்டு மிச்ச பணத்தை அதே நகை மாளிகையிலோ வேறு நகை மாளிகையிலோ வாங்கினா நெறய நகையும் கிடைக்கும் எல்லா சாய்ஸும் இருக்கும். போனது போகட்டும், திட்டத்திலிருந்து விலகி கிடைக்கும் தொகையை வாங்கிட்டு வாங்க. இப்ப வந்தா வெறும் பத்தாயிரம் நஷ்டம் – தொடர்ந்து போட்டுட்டு வந்தா நஷ்டம் ஒரு லட்சத்துக்கு மேல போகும்னு சொன்னா கேப்பீங்களா மாட்டீங்களா?

இப்படி ஒரு திட்டம் உண்மையில் வந்தா 100க்கு 99 பேர் பணம் போட மாட்டாங்க, பணம் போட்டவங்களும் விசயம் புரிஞ்சதும் வெளில வந்துடுவாங்க இல்லையா? 
இதையே டை கட்டிக்கிட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசும் வங்கி விற்பனை பிரதிநிதி ULIP என்கிற பேரில் விக்கும் போது மட்டும் ஏன் முதலீடு செய்ய மறுக்க மாட்டேன் என்கிறோம்? தவறுதலாய் முதலீடு செய்து விட்டாலும் ஏன் வெளி வர மறுக்கிறோம்? 
ஆங்கிலத்தில் Cut Your Losses என்று ஒரு பதம் உண்டு. நட்டம் நிச்சயமாகிப் போன நிலை. அப்போது நாம் செய்ய வேண்டியது நட்டத்தைக் கட்டுப் படுத்தி மேலும் நட்டமாகமல் தடுப்பதுதான்.
பாலிசி எடுப்பது யாராக இருந்தாலும், தேவையான அளவாக கருதப்படும் ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு யூலிப் மூலம் வாங்க முடியாது. வளர்ச்சிக்கென ம்யூச்சுவல் ஃபண்டுக்கு போகும் பணமும் சொற்பமே. இது வரை யூலிப் திட்டத்தில் முதலீடு செய்யாதவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள், தவறுதலாக சேர்ந்தவர்களும், அதிலிருந்து வெளியே வந்து ஆயுள் காப்பீடு தனியாக வாங்கிவிட்டு மிச்சத்தை விருப்பமான ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நலம்.

என்னிடம் காப்பீடு குறித்து கேட்கும் நண்பர்களில் பலரும் முதல் இமெயில் பதிலுக்குப் பிறகு தொடர்பு கொள்வதேயில்லை. அதுக்கு காரணம் அவர்கள் இதுநாள் வரை செய்து வரும் “இன்சூரன்ஸ் முதலீடுகளை” அவர்கள் கைவிடத் தயாராக இல்லை. 
முதலீடு குறித்த படிப்பில் Prosepect Theory என்று ஒரு கான்செப்ட் உண்டு, அதை நூல் பிடித்துப் போனால் தெரியவருவது – “லாபம் தரும் சந்தோசத்தை விட நஷ்டம் தரும் வருத்தம் அதிகம்”. இத்துப்போன மணி பேக் பாலிசியிலோ ஹோல் லைஃப் பாலிசியிலோ மாதம் மூவாயிரம் ரூபாய் செலவிடறாங்க, அதை சர்ண்டர் பண்ணா பத்து பதினைந்தாயிரம் ரூபாய் நஷ்டம் ஆகும். ஆனா டெர்ம் பாலிசி எடுத்துட்டு மிச்சத்தை நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தா முடிவில் இன்சூரன்ஸ் தரும் லாபத்தை விட 3 லட்சம் அதிகம் கிடைக்க வாய்ப்பு மிக மிக அதிகம்னு கணக்கு போட்டு காமிச்சாலும் அதை ஏற்க அவர்கள் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது

மக்கள் முதலீடுன்னு நம்பி இன்சூரன்ஸ் திட்டங்களில் பணம் போடறது கூட Lesser Concern எனக்கு. ஆண்டு வருமானத்தின் ஓரிரு மடங்கு காப்பீடு வச்சிக்கிட்டு False sense of security கொண்டு காப்பீடு இருக்குன்னு நம்பறதுதான் பெரிய பிரச்சனை. இனி முடிவு உங்க கையில்

Please follow and like us: